இஸ்ரேலின் தாக்குதல்களை எதிர்கொண்டு காஸா பகுதி தற்போது மனித உயிர்களை நொடிக்கு நொடி பலிவாங்கும் இடமாக மாறியுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் காஸா பகுதியில் தினமும் 160 சிறுவர்கள் உயிரிழந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பிறகு தொடங்கிய போர் தற்போது காஸா நகரின் மையப்பகுதியிலும் பரவியுள்ளது.
காஸா நகருக்குள் தங்கள் துருப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
இதேவேளை, காஸா நகரில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்காக 04 மணித்தியால மனிதாபிமான வழிப்பாதையை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
1967ல் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீன குழந்தைகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு கடந்த மாதத்தில் இறந்துள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, காஸாவில் தினமும் 160 குழந்தைகள் இறக்கின்றனர்.
இதற்கிடையில், காஸா மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, நாளாந்தம் 50 முதல் 100 லீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் குடும்பம், தற்போது அனைத்துத் தேவைகளுக்கும் 03 லீட்டர் நீரையே பயன்படுத்துகிறது.
அவர்களில் பெரும்பாலோர் அசுத்தமான அல்லது கடல் நீரைப் பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே, பலஸ்தீன ஜனதிபதி மஹ்மூத் அப்பாஸ் பயணித்த வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அங்கு அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார், ஆனால் ஜனாதிபதி காயமடைந்தாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ‘சன்ஸ் ஆஃப் அபு ஜண்டால்’ கும்பல், இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்காக அவரை குறிவைத்ததாகக் கூறியுள்ளது.
