❇️2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
❇️2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(19) இடம்பெற்றது.
❇️அஹமதாபாத் – நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற குறித்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது. இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
❇️அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 72ஆவது அரைச்சதம் இதுவாகும்.அத்துடன், கே.எல். ராகுல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 17ஆவது அரைச்சதம் இதுவாகும்.
❇️பந்துவீச்சில், அவுஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
❇️இந்தநிலையில், 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அணிசார்பில் அதிகபடியாக, டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 05ஆவது சதம் இதுவாகும். அத்துடன், மார்னஸ் லாபுசாக்னே 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 11ஆவது அரைச்சதம் இதுவாகும்.
❇️பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
❇️இந்த வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி 6ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
❇️முன்னதாக, 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலியா அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.