தெஹிவளை பகுதியில் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி நபரொருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை மார்ச் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெஹிவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய சந்தேகநபர் இன்றையதினம் (22-02-2024) கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெஹிவளை – கடவத்தை வீதி பகுதியில் நேற்று காலை 9.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஸ்கூட்டரில் பயணித்த நபர் ஒருவர் மீது பின்னால் வந்த கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இச்சம்பவத்தில் மொரட்டுவை கட்டுபெத்த பிரதேசத்தில் வசித்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும், விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணையில், இது காரின் சாரதி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள மனித படுகொலை என தெரியவந்துள்ளது.