வாடகைக்கு குடியிருப்பவர்களின் நலனை மேம்படுத்த திட்டமிடும் கனடா அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து வந்து கனடாவில் வசிப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மகிழ்ச்சியான தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு பிரத்யேக சட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கை என கனடா கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அதிகரித்து வந்த வீட்டு வாடகைகள், 2023 ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டியது.
மலிவு விலையில் வீட்டுவசதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போன நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை எப்போதும் இல்லாத அளவிற்குக் அதிகரித்த நிலையில், காலியான வீடுகளின் எண்ணிக்கை இல்லை என்ற அளவில் குறைந்துபோனது.

இதனால், கனடாவில் வீட்டு வாடகை உச்சத்தை எட்டியதால், வெளிநாட்டில் இருந்து வந்து வேலைபார்ப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கான செலவும் கணிசமாக அதிகரித்துவிட்டது.
கனடாவில் வீடு வாடகை என்பது வாழ்க்கைச் செலவுகளை வெகுவாக பாதித்துள்ளதற்கும் வெளிநாட்டினரின் குடியேற்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
கனாடாவிற்கு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்க வருவதால் தான் வீட்டு வாடகைகள் அதிகமாக இருப்பதாகவும் எனவே, மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உள்ளூர் மக்களின் குரல்களும் உயரத் தொடங்கிவிட்டன.

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், புதிதாக வாடகைகளுக்காக வீடு மற்றும் கட்டுமானங்கள் கட்டுவதற்கு அரசு விதிக்கும் வரிகளைக் குறைப்பதன் அவசியமும் அதிக அளவில் பேசப்படுகிறது.
2023 ஆம் ஆண்டில் கனடாவில் வாடகை 1.7% அதிகரித்துள்ளதாக சில அறிக்கைகள் கூறின. கடந்த ஆண்டு மட்டும், கனடாவிற்கு 1.2 மில்லியன் பேர் புதிதாக வந்தனர்.